ராகுல் காங்கிரஸ் கவனிக்கவேண்டிய திருத்தம்!

ராகுல் காங்கிரஸ் கவனிக்கவேண்டிய திருத்தம்!
Published on

அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இறுதிப்போட்டி என்றால் இப்போது நடந்துகொண்டிருக்கும் மாநிலத் தேர்தல்கள் அரைஇறுதிப் போட்டி என்று கருதப்படுகின்றன.

சத்திஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான காலம் இது. இவற்றின் முடிவுகள் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகம்.

ராஜஸ்தானை எடுத்துக்கொண்டால் அங்கே பாஜகதான் ஆளும் கட்சி. விஜயராஜே சிந்தியா முதல் அமைச்சர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஜூலை மாதமே மாநில பாஜக செயற்குழுவில் பாஜக வென்றால் மீண்டும் சிந்தியாதான் முதல்வர் ஆவார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துவிட்டார். இத்தனைக்கும் சிந்தியாவுக்கு எதிராக அங்கே குரல்களும் கட்சிகளுக்குள் இருந்தே எழுந்தன. ஆனாலும் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறார்கள்.

காங்கிரஸ் சார்பில் அங்கே முதல்வர் வேட்பாளர் யார்? முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சரும் இளம் அரசியல்வாதியுமான சச்சின் பைலட் என இரு பெயர்கள் அடிபடுகின்றன. இருவருக்குமே ஆதரவுக்குழுக்கள் உள்ளன. இந்த  கோஷ்டிப்பூசல் பாஜகவை எதிர்கொள்ளத் தடையாக இருக்கக்கூடும். இதைப் பற்றி பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘காங்கிரஸால் ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளர் யார் என்று முன்கூட்டியே அறிவிக்கமுடியாது. அப்படி அறிவித்தால் உடனடியாக அம்மாநிலத்தில் அக்கட்சி துண்டு துண்டாகிவிடும்,'' என்று கிண்டலாகச் சீண்டுகிறார்.

மத்தியபிரதேசத்தில் பாஜக 2003 - ல் இருந்து ஆட்சி செய்துவருகிறது. நீண்டகாலமாக சிவராஜ் சிங் சௌகான் அங்கே முதல் அமைச்சர்.  28 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு பாஜகவுக்கு எதிராக உருவாகும் ஆட்சிக்கு எதிரான மனநிலையைப் பயன்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு. இங்கேயும் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்டால் ஒரு குழு கமல்நாத்தையும் இன்னொரு குழு ஜோதிராதித்ய சிந்தியாவையும் இன்னொரு குழு திக்விஜய் சிங்கையும் சுட்டிக்காட்டுகிறது.

சத்திஸ்கரில் என்ன நிலைமை? அங்கே பாஜகவின் ராமன் சிங் பதினைந்து ஆண்டுகளாக  முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரையும் சொல்ல முடியவில்லை. தியோ என்றும் பாஜெல் என்றும் இரு பெயர்கள் அடிபடுகின்றன. காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த அஜித் ஜோகி எப்போதோ அக்கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி கண்டார். அதிலிருந்து காங்கிரஸின் வாய்ப்புகள் அங்கே குறைந்துவிட்டன.

தெலுங்கானாவில் டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வர். காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் வேட்பாளர்? தெரியாது. ஜனா ரெட்டி என்ற பெயரை ஊடகங்கள் முன் வைக்கின்றன. காங்கிரஸ், தெலுங்குதேசம், சிபிஐ, தெலுங்கானா ஜனசமிதி ஆகிய கட்சிகள் மகா கூட்டணி அமைத்துள்ளன. டிஆர்எஸ்ஸை இந்தக் கூட்டணி முறியடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் யாரை முதல்வராக்கப்போகிறது காங்கிரஸ் மேலிடம் என்றால், தெரியாது. பாஜகவுக்கு இம்மாநிலத்தில் செல்வாக்கு குறைவு எனவே முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியே எழவில்லை. ஆனால் முதல்வர் உருவாகும் கட்சியை நாங்கள் தீர்மானிப்போம் என்கிறது பாஜக.

மிஜோராம் மாநிலத்தில் காங்கிரஸ் 2008 - ல் இருந்து ஆட்சியில் உள்ளது. அதன் முதல்வர் லால் தங்காவாலா. எம் என் எப் என்ற கட்சி வலிமையான எதிர்க்கட்சி. இதனுடன் பாஜக கூட்டு வைக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது சற்று சிரமம். ஆனால் பாஜக மீது அம்மாநில கிறிஸ்துவ பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் விலக்கம் காங்கிரஸுக்கே உதவலாம்.

முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் மாநிலத் தேர்தல்களை சந்திப்பதை காங்கிரஸ் வழக்கமாக வைத்துள்ளது. காங்கிரஸ்காரர்களோ  ‘‘எங்கள் கட்சியில் மாநில அளவில் எப்போதும் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து தேர்தலை சந்திக்கும் வழக்கம் இல்லை. சூழ்நிலையைப் பொறுத்து இந்த வழக்கத்தில் மாறுதல் ஏற்படும்'' என்கிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. காங்கிரஸ் மாநிலங்களில் தலைவர்களிடையே நிலவும் கோஷ்டிப்பூசலை சமாளிக்கமுடியாமல் முதல்வர் வேட்பாளராக யாரையும் நியமிப்பது இல்லை. அப்படி யாரையாவது அறிவித்தால் அவரே தேர்தலில் தோற்கடிக்கப் படுவார் என்கிற நிலை. இதற்கு ஒருவகையில் காங்கிரஸ் தலைமையும்தான் காரணம். வலுவான மாநிலத் தலைவர்கள் உருவாவதை இந்திரா காலத்திலிருந்தே காங்கிரஸ் தலைமை முறியடித்து வந்துள்ளது. அவர்கள் அதை விரும்புவது இல்லை! மேலிடத்தில் இருந்து சொல்லப்படுகிறவரை முதல்வராக, தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும். அதை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

 இந்த செயல்திட்டம் கடந்த காலங்களில் உதவிகரமாக இல்லை.

சமீபகாலங்களில் முதல்வர் வேட்பாளராக ஒருவரை அறிவித்து காங்கிரஸ் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் தேர்தலைச் சந்தித்தது. அங்கே வெற்றி பெற்றது. அது பஞ்சாப். கடந்த ஆண்டு அங்கு தேர்தலுக்கு முன்பாக கேப்டன் அமெரிந்தர் சிங்கை காங்கிரஸ் கட்சி தங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. அவரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.

இதே அணுகுமுறையை தற்போதைய மாநிலத் தேர்தல்களுக்கும் கடைபிடித்திருக்கலாம். கோஷ்டிப்பூசல்களை தவிர்க்கக்கூடிய வலுவான அணுகுமுறையை ராகுல் காந்தி கடைபிடிக்கவேண்டும். அதே சமயம் புதிய வலுவான தலைமைகள் மாநிலங்களிலிருந்து உருவாகி வருவதற்கான வாய்ப்புகளையும் தரவேண்டும். உதாரணத்துக்கு, குஜராத் மாநிலத்தைப் பார்க்கலாம். அங்கிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு காங்கிரஸ் தலைவரைக் கூட வளர்த்தெடுக்க டெல்லி தலைமை முயற்சியே செய்யவில்லை. அங்கே காங்கிரசின் தொடர் தோல்விக்கு இதைக் காரணம் காட்டலாம்.

 இன்னொரு உதாரணம் தமிழ்நாடு. இங்கே சமீபத்தில் காங்கிரஸின் மேலிடப்பார்வையாளர் சஞ்சய் தத், திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்தபோது உடன் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் இல்லை. இதன் மூலம் என்ன செய்தியை டெல்லிக்காரர்கள் தரவிரும்புகிறார்கள்?

சமீபத்திய கர்நாடக தேர்தலுக்குப் பின்னர் அம்மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி இருந்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைக் காப்பாற்றும் பொறுப்பு டி.கே. சிவகுமார் என்ற ஒரு தலைவர் வசம் விடப்பட்டது. அவர் தங்கள் வசமிருந்து விலகிச் சென்ற ஒரு எம்.எல்.ஏவைக் கூட மீட்டு வந்து நினைத்ததை சாதித்தார். மாநிலங்களில் வலுவான தலைவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களைச் செயல்பட விடவேண்டுமே?

இது என்னவோ இப்போது புதிதாகச் சொல்லப்படும் விஷயம் இல்லைதான். இந்த அணுகுமுறைக்கு இந்த மாநிலங்களில் இருக்கும் அரசியல் சூழலால் இந்த சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிகூட கிட்டலாம். ஆனால் நீண்டகால நோக்கில் இது உதவப்போவது இல்லை. எனவே ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தன்னை மாற்றிக்கொள்ளலாமே? இந்தத் திருத்தம் அக்கட்சியின் வளர்ச்சிக்கும் 2018 நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னிட்டு வலுவான கூட்டணிக்கான அஸ்திவாரமாகவும் எளிதாக பேரம் பேசுவதற்கும் உதவிகரமாக இருக்கும்! அதைவிட மோடிக்கு எதிராக ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவிக்கவும் வாய்ப்பாக இருக்குமே!

டிசம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com